திருவள்ளூரில் தூய்மைப் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


திருவள்ளூரில் தூய்மைப் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2021 12:11 PM IST (Updated: 24 Aug 2021 12:11 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு நேற்று தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கு உள்ளாட்சி சங்க மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் விஜயன், உள்ளாட்சி மாநில குழு நிர்வாகி கோவிந்தன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட துணை செயலாளர் சூரியபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்கும் ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்கும் ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அரசாணையை திருத்தம் செய்து அதனை அமலாக்க வேண்டும், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் தூய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டிகளுக்கு பதிலாக பேட்டரி வாகனத்தை வழங்க வேண்டும், மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு பணி நிரந்தரம், ஓய்வூதியம், பணிக்கொடை, உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story