மணிலா, கம்பு பயிர்களுக்கு 31-ந் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் மணிலா, கம்பு பயிர்களுக்கு 31-ந் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.மோகன் கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் மானாவாரி கம்பு, மணிலா பயிரிட்டுள்ள விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு
காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் மணிலாவுக்கு ரூ.525.62-ம், கம்புக்கு ரூ.176.36-ம், வாழைக்கு ரூ.1,842.62-ம், மரவள்ளிக்கு ரூ.1,385.68-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண் இணை இயக்குனர் ரமணன், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிகரசுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story