குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Aug 2021 7:47 PM IST (Updated: 24 Aug 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் ஏ.பி. நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். 

பின்னர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும்படி கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது ஏ.பி.நகர் பகுதியில் 1,500 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.

இதுபற்றி பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க வேண்டும். 

குடிநீர் குழாய் இல்லாத இடங்களில் குழாய் அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களை அனைத்தும் சரிசெய்து கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story