மதுபோதையில் சுற்றுலா வேனை கடத்திச்சென்ற வாலிபர்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் நிறுத்தியிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுற்றுலா வேனை வாலிபர் ஒருவர் மதுபோதையில் கடத்திச்சென்றுள்ளார். அந்த வேன் பெரம்பலூர் அருகே மீட்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேன் நிறுத்தும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுற்றுலா வேன் ஒன்றை சவாரி முடிந்ததும் அதன் உரிமையாளர் நிறுத்திவிட்டு அதன் அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவர், வேன் தனியாக நிற்பதை பார்த்ததும் கள்ளச்சாவி போட்டு அந்த வேனை கடத்திக்கொண்டு சென்றார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் பெரம்பலூர் அருகே அந்த வேன் தாறுமாறாகவும், அதிவேகமாகவும் சென்றுள்ளது. அந்த சமயத்தில் அந்த வேனுக்கு பின்னால் வந்த லாரி டிரைவர், அந்த வேனை முந்திச்சென்று மடக்கி சாலையோரமாக வேனை நிறுத்தினார்.
பின்னர் லாரி டிரைவர் கீழே இறங்கி, வேனை ஓட்டி வந்த நபரிடம் எதற்காக இப்படி வேகமாக ஓட்டுகிறாய்? விபத்து நடந்தால் என்னவாவது என்று கூறி மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தினார். ஆனால் அந்த வாலிபர் மதுபோதையில் இருந்ததால் இதுபற்றி விவரம் தெரிவிக்க அந்த சுற்றுலா வேனில் எழுதப்பட்டிருந்த அதன் உரிமையாளரின் செல்போன் எண்ணை லாரி டிரைவர் தொடர்பு கொண்டார். ஆனால் உரிமையாளர் நன்கு அயர்ந்து தூங்கிவிட்டதால் போனை எடுக்கவில்லை.
சாதுர்யமாக தப்பிய வாலிபர்
அதன் பிறகு அந்த நபரிடம் போதை தெளிந்ததும் சீரான வேகத்தில் வேனை ஓட்டிச்செல்லும்படி கூறிவிட்டு லாரி டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார். வேனை கடத்தி வந்ததை பற்றி எதுவும் காட்டிக்கொள்ளாத அந்த நபர், சாதுர்யமாக தப்பித்தோம், பிழைத்தோம் என நினைத்து மீண்டும் அங்கிருந்து திருச்சி மார்க்கமாக வேனை ஓட்டிச்சென்றுள்ளார். ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததால் அந்த வாலிபரால் தொடர்ந்து வேனை இயக்க முடியவில்லை. பெரம்பலூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் அந்த வாலிபர், வேனை நிறுத்திவிட்டு அதிலிருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதனிடையே நேற்று காலை வேனின் உரிமையாளர் தூங்கி எழுந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தனது செல்போனை பார்த்தபோது நள்ளிரவில் மிஸ்டுகால் வந்திருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது லாரி டிரைவர் பேசியுள்ளார். அவர் தெரிவித்த பின்புதான், வேன் கடத்தப்பட்ட விவகாரம் அதன் உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது.
மீட்பு
இதனால் அதிர்ச்சியடைந்த வேனின் உரிமையாளர், இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவர், பக்கத்து மாவட்டங்களில் உள்ள சுற்றுலா வேன் உரிமையாளர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தனது வேன் கடத்தப்பட்ட விவரம் குறித்து கூறினார்.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே கேட்பாரற்ற நிலையில் நின்று கொண்டிருந்த வேனை, சுற்றுலா வேன் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மீட்டு விழுப்புரத்திற்கு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story