தேனியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


தேனியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2021 10:05 PM IST (Updated: 24 Aug 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் 2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி:
தேனியில் 2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான சம்பளத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு நகராட்சி நிர்வாகம் அளித்து விடும். அந்த நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தேனி அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் பெரியகுளம் சாலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிடுங்கள் என்று அறிவுறுத்தினர். 
பேச்சுவார்த்தை
பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வந்தனர். அங்கு அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாட்களில் அனைவருக்கும் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
தூய்மை பணியாளர்களின் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தால் தேனியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story