தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்


தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 24 Aug 2021 10:11 PM IST (Updated: 24 Aug 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தின.

கூடலூர்,

கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான ஸ்ரீ மதுரை, ஓவேலி, தேவாலா உள்ளிட்ட பல இடங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேவாலா மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மளிகைக் கடைகள், வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி வருகிறது.

காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்ககோரி தேவாலா பஜாரில் நேற்று முன்தினம் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். 

தொழிலாளி வீட்டை உடைத்தன

இந்த நிலையில் கூடலூரில் இருந்து தேவாலா செல்லும் சாலையில் உள்ள நாடுகாணி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து காட்டு யானைகள் வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

 இதற்கிடையில், காட்டு யானைகள் தங்கராஜ் என்பவரது வீட்டின் சுவரை  தந்தத்தால் குத்தி உடைத்து சேதப்படுத்தின. பின்னர் வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது.

8 பேர் உயிர் தப்பினா்

இந்த சமயத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் 8 பேர் பயத்தில் விழித்து எழுந்தனர். அப்போது வீட்டின் முன்பு காட்டுயானைகள் நின்றதால், உடனடியாக வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தங்கராஜ் குடும்பத்தினர் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடுகாணி வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாலையில் காட்டுயானைகள் அங்கிருந்து நாடுகாணி வனப் பகுதிக்கு சென்றது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தங்கராஜ் குடும்பத்தினர் காட்டு யானைகளால் சேதமடைந்த வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். 

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story