குடும்ப கட்டுப்பாடு செய்தவர் இறந்த சம்பவம்: பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்


குடும்ப கட்டுப்பாடு செய்தவர் இறந்த சம்பவம்: பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்
x
தினத்தந்தி 24 Aug 2021 5:42 PM GMT (Updated: 24 Aug 2021 5:42 PM GMT)

புதுக்கோட்டையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் இறந்த சம்பவத்தில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.

புதுக்கோட்டை:
பிரேத பரிசோதனை
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 25). இவருக்கு முத்துக்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் ராணி குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார். 
இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமடைந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று காலை அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த ராணியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் (கணேஷ்நகர்) மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் டீன் பூவதியும் விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இறந்த ராணியின் உடலை போலீசார் பெற்றுச்சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.

Next Story