மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை கொலை செய்தவருக்கு தென்காசி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தென்காசி:
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தூய்மை பணியாளர்
தென்காசி மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகம் கம்மாவூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரி (34). சுந்தரிக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் நடைபெற்று 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவரை விட்டு சுந்தரி பிரிந்து ஆறுமுகத்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் 5 வயதில் ஒரு மகன் உள்ளான். சுந்தரி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
மனைவி கொலை
அப்போது அவருக்கும், வேறு சில ஆண்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆறுமுகம் சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இவ்வாறு தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 10-11-2018 அன்று தகராறு முற்றியது. அப்போது வீட்டிலிருந்த சுந்தரியை ஆறுமுகம் அவரது கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி கொலை செய்தார். பின்னர் சுந்தரியின் உடலை போர்வையினால் சுற்றி வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டுவிட்டு சுந்தரியின் அண்ணன் வளவி என்பவரிடம் சுந்தரியை கொலை செய்து விட்டதாக கூறி விட்டு தலைமறைவாகி விட்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து வளவி ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி அனுராதா விசாரித்து மனைவியை கொலை செய்ததற்காக ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், உடலை மறைத்ததற்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னத்துரை ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த ஊத்துமலை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பாராட்டு தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே நீதிமன்றத்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் மனைவியை கொலை செய்த கடையநல்லூரை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனையை நீதிபதி அனுராதா விதித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story