மைசூரு நகைக்கடையில் கொள்ளை-கொலை: குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம்
மைசூரு நகைக்கடையில் நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா அறிவித்துள்ளார்.
மைசூரு: மைசூரு நகைக்கடையில் நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா அறிவித்துள்ளார்.
நகைக்கடையில் கொள்ளை-கொலை
மைசூரு டவுன் வித்யாரண்யபுரம் பகுதியில் தர்மேந்திரா என்பவருக்கு சொந்தமான ‘அம்ருத் கோல்டன் அன்ட் சில்வர் பேலஸ்’ என்ற நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாைல தர்மேந்திரா நகைக்கடையில் இருந்தார். அப்போது அங்கு வாடிக்கையாாளர் போல புகுந்த மர்மநபர்கள், தர்மேந்திராவை தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.
இதனை தடுக்க முயன்ற தர்மேந்திராவை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அவர் கீழே படுத்துக்கொண்டதால், நகைக்கடைக்கு வந்த சந்துரு (23) என்பவர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மர்மநபர்கள் கொள்ளையடித்த நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, உயர் போலீஸ் அதிகாரிகள், வித்யாரண்யபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
வாகன சோதனை
இதையடுத்து போலீசார் நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களின் உருவங்கள் தெளிவாக பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் கொள்ளையர்கள் தப்பிவிடாமல் இருக்க மைசூரு நகரம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இதனால் போலீசார் மைசூரு நகரம் முழுவதும் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். நேற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மர்மநபர்களின் படங்களும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
8 தனிப்படை அமைப்பு
இந்த சம்பவம் குறித்து மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மைசூரு நகைக்கடையில் நடந்த கொள்ளை, கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளது. அந்த படங்கள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மைசூருவில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் மொத்தம் 105 போலீசார் உள்ளனர். தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் நகரில் உள்ள மற்ற கடைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் சன்மானம்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் படங்கள் வெளியிடப்படும். குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும். போலீசாருக்கு துப்பு கொடுப்பவர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும். குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் 9480802200 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story