மேகதாது அணை திட்டம்; பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்
மேகதாது அணை திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரி மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்.
பெங்களூரு: மேகதாது அணை திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரி மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்.
மேகதாது அணை திட்டம்
கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது.
அதாவது பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மின்சாரம் உற்பத்திக்காகவும் இந்த அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய ஜல்சக்தி துறைக்கும், மத்திய ஜல்சக்தி ஆணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கிடைப்பதில் பிரச்சினை நீடித்து வருகிறது.
இன்று டெல்லி பயணம்
இதுபோல் கிருஷ்ணா, மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் கர்நாடகம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அண்டை மாநிலங்களுடனான இந்த நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகளை தீர்க்க பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேச உள்ளார். இதற்காக பசவராஜ் பொம்மை இன்று (புதன்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள்
அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க நான் டெல்லி செல்ல இருக்கிறேன். கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல், மூத்த வக்கீல்கள், சட்ட நிபுணர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். நதி நீர் பிரச்சினைகளில் கர்நாடக அரசின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
கர்நாடகத்தின் நிலம், நீர், மொழியை பாதுகாக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்வேன். இதில் யாருக்கும் எந்த விதமான ஆதங்கமும் வேண்டாம். நாளை (அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். 26-ந் தேதி மத்திய மந்திரிகளை சந்தித்து பேச உள்ளேன். இந்த சந்திப்பின்போது கர்நாடகத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்க இருக்கிறேன். மத்திய சுகாதாரம், நிதி, ஜல்சக்தி, விவசாயம் மற்றும் ராணுவ துறைகளின் மந்திரிகளை சந்திக்க உள்ளேன்.
நிபுணர் குழு
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க ஏற்கனவே நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தொடர்ந்து செயல்படும். தேசிய பேரிடர் நிர்வாக குழு வருகிற அக்டோபர் மாதம் கர்நாடகத்திற்கு வரும். கொரோனா 3-வது அலையை தடுப்பது குறித்து அந்த குழு நடத்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
மேகதாது திட்டத்துக்கு அனுமதி
டெல்லி பயணத்தின்போது ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேச உள்ள பசவராஜ் பொம்மை, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்க உள்ளார்.
இதற்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடகத்தை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யின் மேகதாது திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கஜேந்திரசிங் ஷெகாவத், மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு உள்பட காவிரி படுகையில் அமைந்துள்ள மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்று பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் கஜேந்திரசிங் ஷெகாவத்தை பசவராஜ் பொம்மை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது, குடிநீர் திட்டங்களை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை என்பது குறித்து அவர் மத்திய மந்திரியிடம் எடுத்து கூற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாதயாத்திரை
மேகதாது திட்டத்தை செயல்படுத்த கோரி ஜனதாதளம் (எஸ்) கட்சி வருகிற விஜயதசமி பண்டிகைக்கு பிறகு பாதயாத்திரை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டமும் நடத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பசவராஜ் பொம்மை டெல்லி சென்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய மந்திரிகளை சந்தித்து பேசவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story