நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி


நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி
x
தினத்தந்தி 25 Aug 2021 3:09 AM IST (Updated: 25 Aug 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கில், நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியது தடய அறிவியல் ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு: கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கில், நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியது தடய அறிவியல் ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நடிகைகள் கைது

பெங்களூரு கல்யாண்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் விற்றதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி கன்னட சின்னத்திரை துணை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் முகமது அனுப், ரிஜேஸ் ரவீந்திரன் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியதும், அவர்களுக்கு அனிகா போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் போதைப்பொருட்கள் பயன்படுத்திய கன்னட திரை உலகினரை கைது செய்ய தீவிரம் காட்டினர். அதன்படி போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட 2 நாட்களில் அதாவது 2020-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி இன்னொரு பிரபல நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வந்தனர்

அவர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவிசங்கர், போதைப்பொருள் விற்பனையாளரான லூம் பெப்பர் சம்பா, ராகுல் தோன்சே, முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவை காரணம் காட்டி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி சஞ்சனா கல்ராணிக்கு, கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவர் 56 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து இருந்தார். ஆனால் ராகிணிக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க 3 முறை மறுத்தது. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்ற அவர் 140 நாட்களுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

இதற்கிடையே விசாரணையின் போது ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய அவர்களுக்கு ரத்தம், சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுநீருக்கு பதிலாக தண்ணீரை ஊற்றி கொடுத்ததாக ராகிணி திவேதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தடயத்தை அழிக்க முயன்றதாக ராகிணி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

மேலும் 2 பேரின் தலைமுடிகளும் சேகரிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் மையத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 10 மாதங்கள் கழித்து தடய அறிவியல் மையத்தில் இருந்து பரிசோதனை அறிக்கை, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, ரவிசங்கர், லூம் பெப்பர் சம்பா, ராகுல் தோன்சே ஆகியோர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல் அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனித் பெங்களூருவில் உள்ள 33-வது சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

கூடுதலாக 10 பக்க குற்றப்பத்திரிகை

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் மீது கோர்ட்டில் 2,500 பக்க குற்றப்பத்திரிகையை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்து இருந்தனர். 

தற்போது தடய அறிவியல் அறிக்கையுடன் சேர்த்து கூடுதலாக இந்த வழக்கு தொடர்பாக 10 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு சிக்கல் எழுந்து உள்ளது. தற்போது ஜாமீனில் உள்ள அவர்களை போலீசார் மீண்டும் அழைத்து விசாரணை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

Next Story