அரசியல் கட்சிகளுக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்


அரசியல் கட்சிகளுக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Aug 2021 3:18 AM IST (Updated: 25 Aug 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மக்கள் முன் பிரமாண பத்திரம் வெளியிட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மக்கள் முன் பிரமாண பத்திரம் வெளியிட வேண்டும் என்று  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டுப்புற கலைகள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார சுற்றுப்பயணமாக கடந்த 16-ந் தேதி கர்நாடகம் வந்தார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிருபர்களுடன் "இன்பார்மல் முறையில்" கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டன். ஹம்பியில் உள்ள பாரம்பரிய பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னத்தை குடும்பத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தேன். அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுமி நாட்டுப்புற பாடலை அருமையாக பாடினார். நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியுடன் பேசுவேன்.

கிழித்து எறிந்தனர்

கர்நாடகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் கூறினேன். அதற்கு அவர் தற்போது வழங்கப்படும் தடுப்பூசியில் கூடுதலாக 25 சதவீத டோஸ்கள் ஒதுக்கப்படும் என்று உறுதியளித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சில எம்.பி.க்கள் கலாட்டா செய்து சபையை நடக்கவிடாமல் செய்தனர்.

அது மட்டுமின்றி மத்திய மந்திரிகள் கைகளில் வைத்திருந்த ஆவணங்களை பறித்து கிழித்து எறிந்தனர். சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில உறுப்பினர்கள் தரம் தாழ்ந்து செயல்பட்டனர். அதனால் தான் அன்றைய தினம் மிக வேதனை அடைந்தேன். அதை பார்த்து எனக்கு பயமில்லை. அவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

எம்.பி.க்களின் செயல்பாடு...

அவ்வாறு நடவடிக்கை எடுப்பதால் இந்த நிலை மாற வாய்ப்பு இல்லை. அந்தந்த கட்சிகள் தங்களின் உறுப்பினர்கள் சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு பிரமாண பத்திரத்தை அரசியல் கட்சிகள் மக்கள் முன் வெளியிட வேண்டும். அதில் கூறியபடி எம்.பி.க்கள் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதுபற்றி முடிவு எடுப்பார்கள்.

சபை தலைவர் பீடத்தை எம்.பி.க்கள் மதிக்க வேண்டும். சபையில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இல்லை. 10 சதவீதம் பேர் மட்டுமே ரகளையில் ஈடுபடுகிறார்கள். சபையில் ஆரோக்கியமான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும். ஆளும் தரப்பினர் திட்டங்களை முன்மொழிய வேண்டும். எதிர்தரப்பினர் அதுபற்றி தங்களின் கருத்துகளை கூற வேண்டும். அந்த விஷயத்தில் சபை முடிவு எடுக்க வேண்டும். இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காவிரி பிரச்சினை

மேகதாது, காவிரி பிரச்சினை உள்பட எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அதுகுறித்து சபையில் பேச வேண்டும். அதற்கு தீர்வு காண வேண்டும். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து எம்.பி.க்களும் மோசம் என்று கூறவில்லை. சில கட்சிகளின் எம்.பி.க்கள் இதுவரை தர்ணா நடத்தியது இல்லை. எந்த கட்சி என்று நான் கூறமாட்டேன். அவ்வாறு கட்சி பெயர் கூறினால், நான் அந்த கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறனே் என்று கூறிவிடுவார்கள்.

16 நாட்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது. அந்த 16 நாட்களும் சபை முடக்கப்பட்டது. கேள்வி நேரத்திற்கு கூட வாய்ப்பு வழங்கவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கு திறமை படைத்தவர்கள் உறுப்பினர்களாக வர வேண்டும். சமீபகாலமாக சாதி, பணம், குற்றப்பின்னணி கொண்டவர்கள் மெல்ல வரத்தொடங்கியுள்ளனர். இது ஜனநாயகத்தை வலுவிழக்க செய்யும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

நாடாளுமன்றத்தில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்

வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், நாம் எப்போதும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் நாடாளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன். தாய்மொழியில் பேசும்போது நாம் சொல்ல வரும் விஷயத்தை முழுயைமாக புரியும்படி சொல்ல முடியும். ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். எந்த மொழியாக இருந்தாலும் சரி, தாய்மொழி அவ்வளவு அருமையானது.

 மத்திய அரசு தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் தாய்மொழி வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது நல்ல விஷயம். இதனால் தாய்மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன் என்றார். 

Next Story