கோவில்பட்டியில் விவசாயிகள் நூதன போராட்டம்


கோவில்பட்டியில் விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2021 5:16 PM IST (Updated: 25 Aug 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான நகைகளை திரும்ப வழங்கக்கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மடிப்பிச்சை கேட்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான நகைகளை திரும்ப வழங்கக்கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மடிப்பிச்சை கேட்கும் நூதன போராட்டம் நடத்தினர்.
நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர். அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான நகைகளை உடனடியாக திரும்ப வழங்க கோரி அந்த அலுவலகம் முன்பு மடியேந்தி பிச்சை கேட்கும் நூதன போராட்டம் நடத்தினர்.
இதில், மாநில துணைத் தலைவர் நம்பிராஜன், மாவட்ட தலைவர் நடராஜன், அவைத்தலைவர் வெங்கடசாமி, விளாத்திகுளம் செயலாளர் பிரதீப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை
பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 8 மாதங்கள் ஆகியும் நகைகள் விவசாயிகளுக்கு இன்னும் திருப்பித்தரப்படவில்லை. மழைக்காலம் தொடங்கிவிட்டது. விவசாயிகள் நிலங்களில் பணிகளை தொடங்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான நகைகளை காலதாமதமின்றி திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் அறிவித்தது. இந்தப் பணம் 40 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும்.
பயிர்காப்பீடு
போலி உரங்கள், பூச்சி மருந்துகள், விதைகள் விற்பனையை கண்டறிந்து வேளாண் துறையினர் தடுக்க வேண்டும். உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மானிய விலையில் உரங்களை வழங்க வேண்டும். குளறுபடிகள் இல்லாமல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு சீராக தாமதமின்றி வழங்க வேண்டும். 2018-2019-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். உண்மையாக பயிர் செய்த விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். மழை பெய்யும் காலங்களான செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்கள் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story