பட்டா மாற்றம் செய்ய தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா மாற்றம் செய்ய தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தைலாபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் உத்திரகுமார் (வயது 30), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் வாங்கினார்.
இந்த நிலத்திற்கு தனது தந்தை ஏழுமலையின் பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, அங்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரான சேர்ந்தனூரை சேர்ந்த ராஜூ (59) என்பவரை அணுகினார்.
ரூ.20 ஆயிரம் லஞ்சம்
அப்போது பட்டா மாற்றம் செய்து தர வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என உத்திரகுமாரிடம், ராஜூ கூறியதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத உத்திரகுமார், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று உத்திரகுமார் எடுத்துக்கொண்டு தைலாபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த ராஜூவிடம் கொடுத்தார்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
அந்த பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் விரைந்து சென்று ராஜூவை மடக்கிப்பிடித்தனர்.
அதனை தொடர்ந்து ராஜூவை போலீசார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story