வேலூர் மாநகராட்சி பகுதியில் வாடகை செலுத்தாத 250 கடைகளுக்கு நோட்டீஸ்
வேலூர் மாநகராட்சி பகுதியில் வாடகை செலுத்தாத 250 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் வாடகை செலுத்தாத 250 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
வாடகை பாக்கி
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான சாரதிமாளிகை, நேதாஜி மார்க்கெட் மற்றும் வணிகவளாகங்களில் சுமார் 1,500 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு குறிப்பிட்ட வாடகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்படுகிறது. அந்த வாடகையை மாதந்தோறும் அந்தந்த மண்டலத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் கடையின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் முறையாக கடை வாடகை செலுத்தவில்லை. தொற்று கட்டுப்பாடுகள் தளர்வுகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக வழக்கம்போல் இயங்கி வருகின்றன. ஆனாலும் கடைக்காரர்கள் பல மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை. அதனால் மாநகராட்சிக்கு வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே மாநகராட்சி கடைகளில் வாடகை பாக்கியை வசூலிக்கவும், வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கும்படி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.
250 கடைகளுக்கு நோட்டீஸ்
அதன்பேரில் 4 மண்டல வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களிடம் பணம் செலுத்தும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்பின்னரும் வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலாவது மண்டலத்தில் 22 கடைகள், 2-வது மண்டலத்தில் 72 கடைகள், 3-வது மண்டலத்தில் 6 கடைகள், 4-வது மண்டலத்தில் 150 கடைகள் என்று மொத்தம் 250 வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் இருந்து பெறப்படும் வாடகை தான் மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் ஆகும். இதன் மூலம் சுகாதார ஊழியர்களுக்கு ஊதியம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைக்காரர்கள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளதால் அதனை வசூல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடகை செலுத்தாத 250 கடைகளுக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும் வாடகை செலுத்தவில்லை என்றால் அந்த கடைகளுக்கு விரைவில் ‘சீல்' வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story