கைதியை துரத்திப்பிடித்த போலீஸ் ஏட்டு
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதியை துரத்திப்பிடித்த போலீஸ் ஏட்டுவை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதியை துரத்திப்பிடித்த போலீஸ் ஏட்டுவை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
தப்பி ஓட்டம்
திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவரை இரணியல் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதற்கிடையே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்து, போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் அந்த ஆசாமி சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணி அளவில் தப்பித்து ஓடினார்.
இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்களும், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீஸ் ஏட்டு ராஜேஷ்குமாரும் அந்த ஆசாமியை தேடினர். ஆஸ்பத்திரியின் பின்கேட் பகுதியில் ராஜேஷ்குமார் தேடிக்கொண்டிருந்தபோது மற்றொரு வாலிபர் ஆஸ்பத்திரியின் சுவரை ஏறிக்குதித்து தப்பி ஓட முயன்றார்.
கைதி
திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆசாமிதான் தப்பி ஓடுவதாக எண்ணி, ஏட்டு ராஜேஷ்குமார் அந்த வாலிபரை துரத்திப்பிடித்த போது, அவரிடமிருந்து திமிறிக்கொண்டு ஓட முயன்றார். உடனே வாலிபரின் வேட்டியாலேயே கால்களை கட்டி புறக்காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அப்போதுதான் அந்த வாலிபர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த நவ்சாத் (வயது 26) என்பதும், கொல்லங்கோடு போலீஸ் நிலைய போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு குழித்துறை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஜெயிலில் இருக்கும்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகளுக்கான வார்டில் கடந்த 20-ந் தேதி அனுமதித்து சிகிச்சை அளித்து வந்ததும், அதிகாலை தப்பி ஓட முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது.
பின்னர் அவரை மீண்டும் குழித்துறை சப்-ஜெயிலுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
கைதிகளுக்கான வார்டில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய 10 நிமிடங்களில் போலீசாரிடம் அவர் சிக்கியதால் இந்த பரபரப்பு அடங்கியது. பின்னர் போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்து, தப்பி ஓடிய நபரை ஏட்டு ராஜேஷ்குமார் தேடினார். அப்போது அவர் அங்குள்ள ஒரு புதரில் மறைந்து இருந்ததை கண்டுபிடித்து, அவரையும் போலீசார் பிடித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய ஏட்டு ராஜேஷ்குமாரை அழைத்து பாராட்டினார். மேலும் அவருக்கு ரூ.500 சன்மானமும் வழங்கினார்.
Related Tags :
Next Story