தேஜஸ் போர் விமானத்தில் பறந்து விமானப்படை தளபதி ஆய்வு
தொடக்க செயல்பாட்டு அனுமதிக்கான சோதனை நிலையில் உள்ள தேஜஸ் போர் விமானத்தில் பறந்து இந்திய விமானப்படை தளபதி ஆய்வு செய்தார்.
பெங்களூரு: தொடக்க செயல்பாட்டு அனுமதிக்கான சோதனை நிலையில் உள்ள தேஜஸ் போர் விமானத்தில் பறந்து இந்திய விமானப்படை தளபதி ஆய்வு செய்தார்.
தேஜஸ் போர் விமானம்
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். படாரியா, கடந்த 23-ந் தேதி பெங்களூரு வந்தார். 2 நாட்கள் இங்கு தங்கியிருந்த அவர் எச்.ஏ.எல்., ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போர் விமான சோதனை மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். தொடக்க செயல்பாட்டு அனுமதிக்கான தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் (எல்.சி.ஏ.) அவர் பறந்து ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் அந்த தேஜஸ் விமான செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் தொடக்க செயல்பாட்டு அனுமதி குறித்த தகவல்கள், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்த தகவல்களை அங்கிருந்த அதிகாரிகள் எடுத்து கூறினர். அங்கு படாரியா பேசும்போது, "போர் விமான பரிசோதனை மையத்தின் பணிகள் சவாலானது. இந்திய விமானப்படையின் செயல்பாட்டு மையத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவும், திட்டங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கவும் இந்த பரிசோதனை மையத்தினர் தங்களின் ஆற்றல், அனுபவத்தை முழுமையான அளவில் பயன்படுத்த வேண்டியது அவசியம்" என்றார்.
போர் திறன்கள்
அதைத்தொடர்ந்து விமானப்படை தளபதி, மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிறுவனம் விமானம் தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த நிறுவனத்தில் பேசிய அவர், "மிக முக்கியமான திட்டங்களில் இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல் மற்றும் அதன் செயல்பாடுகளை அதிகரித்தலில் இந்த மென்பொருள் உற்பத்தி நிறுவனம் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இந்திய விமானப்படை போர் விமானங்களில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தவும், நமது போர் திறன்களை மேம்படுத்தவும் தேவையான தொழில்நுட்பங்களை சொந்தமாக உருவாக்க வேண்டும்" என்றார்.
எதிர்கால தேவைகள்
மேலும் அவர் சோதனை மைய அதிகாரிகள், எச்.ஏ.எல்., ராணுவ ஆராய்ச்சி நிறுவனம், விமான மேம்பாட்டு முகமையின் என்ஜினீயர்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், "நமது விமானப்படையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய போர் விமானங்களை முற்றிலும் சொந்தமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நமது இலக்கை அடைய நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டியது அவசியம்" என்றார்.
Related Tags :
Next Story