லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் என்ஜினீயர் பரிதாப சாவு-பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு


லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் என்ஜினீயர் பரிதாப சாவு-பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 2:58 AM IST (Updated: 26 Aug 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியான நபர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

ஓமலூர்:
ஓமலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியான நபர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
லாரி மீது கார் மோதல்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவட்டிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் அருகே கடந்த 23-ந் தேதி பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில் பலியானார். இதனால் டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். 
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று பிச்சைக்காரர் உடல் மீது ஏறியதில் நிலைதடுமாறியது. பின்னர் அந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நாமக்கல் மாவட்டம் ஓலப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளர் பொன்மலை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் படுகாயம் அடைந்த இவருடைய மனைவி சகுந்தலா (வயது 56), மகள்கள் சோபனா (34), நித்தியகுமாரி (29), சோபனாவின் மகன் மித்திரன் (5) ஆகியோர் மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெண் என்ஜினீயர் பலி
இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சகுந்தலா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த நித்திய குமாரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story