சேலம் அருகே பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்
சேலம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பூர்:
சேலம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவர் தற்கொலை மிரட்டல்
சேலம் கருப்பூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). டிரைவர். இவருக்கு சந்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சந்தியா வேறு ஒரு நபருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார் நேற்று இரவு 7 மணிக்கு கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு ஏராளமான பொதுமக்களும் குவிந்தனர்.
வீடியோ கால்
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் செல்போன் வீடியோ கால் மூலம் விஜயகுமாரை தொடர்பு கொண்டு பேசினர். மேலும் அவருடைய குழந்தைகளும் அழைத்து வரப்பட்டு பேசினர்.
இதையடுத்து 2½ மணி நேரத்திற்கு பிறகு அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி கீழே வந்தார். இதையடுத்து போலீசார் அவரை கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆலோசனை, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story