2 பெண் குழந்தைகள் ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை; தாய் உள்பட 7 பேர் மீது வழக்கு


2 பெண் குழந்தைகள் ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை; தாய் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Aug 2021 4:10 AM IST (Updated: 26 Aug 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே, 2 பெண் குழந்தைகள் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த குழந்தைகளின் தாய் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முக்கூடல்:
திருப்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி தேவி (வயது 27). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகள் தர்ஷனா (2). இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மார்ச் மாதம் தேவி நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மயிலப்புரம் வந்தார். அங்குள்ள உறவினர் வியாகம்மாள் மேரி என்பவர் வீட்டில் தங்கினார். ஏற்கனவே தேவி கர்ப்பிணியாக இருந்தார்.

மயிலப்புரம் வந்த தேவி வருமானம் இன்றி கஷ்டப்பட்டதால் மகள் தர்ஷனாவை வளர்க்க முடியாமல் இருப்பதாக வியாகம்மாள் மேரியிடம் வேதனையுடன் தெரிவித்தார். பின்னர் தேவி, வியாகம்மாள் மேரி ஆகியோர் சேர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மயிலப்புரத்தை  சேர்ந்த ஜான் எட்வர்ட், அற்புதம் ஆகியோரிடம் குழந்தை தர்ஷனாவை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்தனர்.

இதற்கிடையே, கர்ப்பிணியாக இருந்த தேவி தனக்கு 2-வது குழந்தை பிறந்தாலும் அதனையும் வளர்க்க முடியாது என்று நினைத்து கவலை அடைந்தார்.இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த மார்க்ரெட் தீபா என்ற பெண்ணிடம் தேவி, வியாகம்மாள் மேரி ஆகியோர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தென்காசியை சேர்ந்த அமலா பாத்திமா, ஜெபஸ்டின் ஆகியோரை அணுகி 2-வது குழந்தை கருவில் இருப்பது பற்றி கூறி அதை கவனித்து கொள்வீர்களா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அந்த குழந்தையை தாங்கள் வாங்கிக்கொள்வதாக கூறினர். அதற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் விலை பேசி கருவில் இருக்கும்போதே குழந்தையை விற்று விட்டனர்.

தேவி வயிற்றில் இருந்தது முதல் குழந்தை பிறக்கும் வரை ஆகும் செலவை அமலா பாத்திமா ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேவிக்கு ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. கர்ப்பிணி தேவிக்கு சத்தான உணவு பொருட்கள் கொடுத்து வந்தனர். பிரசவ காலம் நெருங்கியதும் தேவியை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது 2-வதாகவும் தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அமலா பாத்திமாவிடம் கொடுத்து விட்டனர்.

இதற்கிடையே, தேவி செல்போனில் ஒருவரிடம் பேசியுள்ளார். அப்போது முதல் குழந்தையை ரூ.30 ஆயிரதுக்கு விற்று விட்ே்டன். 2-வது பெண் குழந்தையையும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் விற்று தந்துள்ளார் என கூறியுள்ளார். இந்த நிலையில் தேவி, வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா ஆகிய 3 பேருக்கும் பணம் பிரிப்பது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது பற்றிய தகவல் வெளியே தெரியவந்தது.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரமேசுக்கும் குழந்தைகள் விற்பனை பற்றிய தகவல் வந்தது. அவர் இதுகுறித்து முக்கூடல் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அனிதா சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் மேற்கண்ட பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து தேவி, வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா, ஜான் எட்வர்ட், அற்புதம், அமலா பாத்திமா, ஜெபஸ்டின் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் போலீசார் முக்கூடலில் இருந்த தர்ஷனா மற்றும் 2-வது பெண் குழந்தையையும் மீட்டனர். பின்னர் 2 குழந்தைகளையும் ஆலங்குளத்தில் உள்ள குழந்தைகள் சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

பணத்துக்காக 2 பெண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story