வாடகை செலுத்தாத 736 கடைகளுக்கு ‘சீல்’


வாடகை செலுத்தாத 736 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 26 Aug 2021 2:29 PM IST (Updated: 26 Aug 2021 2:29 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 736 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 736 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

நகராட்சி மார்க்கெட்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு கடந்த 1.7.2016-ந் தேதி முதல் வாடகை மறுநிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை நிலுவை தொகையை முழுவதும் செலுத்தாமல் கடை உரிமையாளர்கள் இருந்து வருகின்றனர்.

தொடர்ந்து வியாபாரிகளுடன் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளுக்கு உண்டான நிலுவை தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

வியாபாரிகள் எதிர்ப்பு

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி போலீஸ் பாதுகாப்புடன் மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க சென்றார். 

அப்போது ஒரு மண்டியில் வியாபாரிகள் திரண்டு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஷட்டரை அடைக்க விடாமல் உள்ளே சென்றனர். மேலும் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் சீல் வைக்க விடாமல் தடுத்தனர்.

இதையொட்டி நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் ஆகியோர் மேற்பார்வையில் ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சசிகுமார் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்; 400 பேர் கைது

பாதுகாப்பு கருதி மார்க்கெட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டதுடன், பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர்.

 வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் தீவிர நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஊட்டி புளுமவுண்டன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வியாபாரிகள் பெண்கள் 43 பேர் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்கள், தனியார் மினிபஸ், அரசு பஸ்களில் ஏற்றி 2 மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

736 கடைகளுக்கு ‘சீல்’

நகராட்சி ஆணையாளர் வாகனத்தில் மார்க்கெட்டுக்கு வந்தார். வியாபாரிகள் வாகனத்தை முற்றுகையிட்டு ஆணையாளரை மாற்றக்கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி வருவாய் அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

 அதேபோல் வெளிப் பகுதியில் உள்ள நகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறியதாவது:-

1,587 கடைகளில் வாடகை செலுத்தாத 1,395 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிலுவை தொகை வைத்துள்ள 736  கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக மற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

கால அவகாசம்

வாடகை செலுத்த மறுப்பவர்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. வாடகை நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் அந்த கடைகள் மறு ஏலம் விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 ரூ.38 கோடி நிலுவை உள்ளதால், கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட வியாபாரிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story