காட்டு யானைகளை விரட்டக்கோரி தாவரவியல் பூங்காவை பொதுமக்கள் முற்றுகை
காட்டு யானைகளை விரட்டக்கோரி தாவரவியல் பூங்காவை பொதுமக்கள் முற்றுகை.
கூடலூர்
கூடலூர் அருகே 2 வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இந்த காட்டு யானைகளை விரட்டக்கோரி நாடுகாணி தாவரவியல் பூங்காவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, நாடுகாணி உள்பட பல இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களிலும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன.
மேலும் வாழை, தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களையும் காட்டு யானைகள் நாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேவாலா பகுதியில் முகாமிட்டிருந்த 2 காட்டு யானைகள் தற்போது நாடுகாணி பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் தங்கராஜ் என்பவரது வீட்டை காட்டு யானைகள் உடைத்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிர் தப்பினர்.
எம்.எல்.ஏ. தந்தை வீடு சேதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நாடுகாணி சேரன்நகர் பகுதிக்குள் மீண்டும் காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து ரவி என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியன. இதனால் அச்சம் அடைந்த ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தந்தை வசித்து வந்த வீட்டில் கதவை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இந்த நேரத்தில் அந்த வீட்டில் யாரும் இல்லை.
தாவரவியல் பூங்காவை முற்றுகை
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்க தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தேவாலா வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையினரை கண்டித்து நாடுகாணி தாவரவியல் சுற்றுச்சூழல் பூங்காவை நேற்று காலை 11 மணிக்கு நாடுகாணி பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்கி யானைகள்
இதையறிந்த தேவாலா வனச்சரகர் பிரசாத், போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வனத்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைத்து காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக வனச்சரகர் பிரசாத் உறுதி அளித்தார்.
இதைதொடர்ந்து பகல் 11.30 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story