கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
கேரள-கர்நாடகா எல்லைகளில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
கூடலூர்
கேரள-கர்நாடகா எல்லைகளில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
சுற்றுலா தலங்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி கடந்த 23-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. மேலும் கர்நாடகா மாநிலத்திற்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
மாநில எல்லையில் சோதனை
இதைத்தொடர்ந்து கேரள- கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளார்களா என கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் வருவாய்த்துறையினர் சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி நாடுகாணி, பாட்டவயல், சோலாடி மற்றும் கர்நாடக எல்லையான கக்கநல்லா உள்பட பல சோதனைச்சாவடிகளில் கூடலூர், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளார்களா என்று சோதனை செய்து வருகின்றனர்.
திருப்பி அனுப்பப்பட்டனர்
கூடலூர்- கேரள எல்லையான நாடுகாணியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் வந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங்களை வருவாய்த்துறையினர், போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story