புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் புதிதாக கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்பில் கடந்த 2 மாதங்களாக சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வீடுகளில் கட்டுமான பணி தரமற்று இருப்பதாகவும், கையால் தட்டினாலே சிமெண்டு பூச்சுகள் உதிர்வதாகவும், இதனால் தாங்கள் உயிர் பயத்தில் வசித்து வருவதாகவும் அங்கு குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டினார். இதுகுறித்த வீடியோ காட்சியும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஐ.ஐ.டி. அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கழகம்) தலைமை செயல் பொறியாளர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அங்கு குடியிருக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இது தொடர்பாக 3 வாரங்களில் ஆய்வு அறிக்கையை தயார் செய்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story