தேனி அருகே ஸ்ரீரெங்கபுரத்தில் 5 மரங்கள் வெட்டியதற்கு பதிலாக 100 மரக்கன்றுகள் நட வேண்டும் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு


தேனி அருகே ஸ்ரீரெங்கபுரத்தில்  5 மரங்கள் வெட்டியதற்கு பதிலாக 100 மரக்கன்றுகள் நட வேண்டும்  ஊராட்சி நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2021 7:28 PM IST (Updated: 26 Aug 2021 7:28 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஸ்ரீரெங்கபுரத்தில் “5 மரங்கள் வெட்டியதற்கு பதிலாக 100 மரக்கன்றுகள் நட வேண்டும்” என்று ஊராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

தேனி :
தேனி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் அருகில் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு இருந்தன. கடந்த மாதம் இங்கு இருந்த 2 வாகை மரங்கள், ஒரு நாவல் மரம், அரசமரம், வேப்பமரம் என 5 மரங்கள் வெட்டப்பட்டன. இதையடுத்து தகுந்த காரணமின்றி மரங்கள் வெட்டப்பட்டதால் அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பவர் இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் செயல்படும் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான முகமது ஜியாவுதீன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பதில் அளிக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய பொறியாளர், ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு நீதிபதி சம்மன் அனுப்பினார்.
100 மரக்கன்றுகள் நட உத்தரவு
இதையடுத்து மின்வாரியம் தரப்பில் கோர்ட்டில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், விளையாட்டு மைதானம் அருகில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி மேற்கொண்டபோது, மின்கம்பிகள் அமைக்கும் இடத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், செயலாளர் சுருளி ஆகியோர் அளித்த விளக்கத்தில், மரக்கிளைகளை வெட்டுவதற்கு உத்தரவிட்ட நிலையில் தவறுதலாக மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் அளித்த விளக்கத்தில், இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வெட்டப்பட்ட மரங்கள் கைப்பற்றப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த விசாரணையை தொடர்ந்து நீதிபதி முகமது ஜியாவுதீன் அளித்த தீர்ப்பில், "அவசியம் இல்லாமல் மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் வெட்டப்பட்ட 5 மரங்களுக்கு பதிலாக 100 மரக்கன்றுகளை ஊராட்சி நிர்வாகம் ஒரு மாதத்துக்குள் நட வேண்டும். மரக்கன்றுகள் நடப்படும் நிகழ்வை கிராம நிர்வாக அலுவலர் உறுதிப்படுத்தி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார். விசாரணையின்போது நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் பிரதாப்சிங், குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story