கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்த வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கூடலூர் :
கூடலூரில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏகலூத்துபகுதி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இந்த பகுதியிலிருந்து கழுதை மேடு புலம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் வண்டிப்பாதை பயன்பாட்டில் இருந்தது. அதன்பின் சிலர் வண்டிப்பாதையை ஆக்கிரமித்து மரங்கள் மற்றும் பயிர் சாகுபடி செய்தனர். இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாமலும், விளை பொருட்களை கொண்டுவர முடியாமலும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து விவசாயிகளின் புகாரை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு வருவாய்த்துறை மூலம் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும் கூடலூர் நகராட்சி மூலம் ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் தார்சாலை அமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ேநற்று உத்தமபாளையம் தலைமை நில அளவையர் சரவணன், கம்பம் வருவாய்த்துறை ஆய்வாளர் செந்தில்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேலக்கூடலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது முல்லைச்சாரல் விவசாய சங்கம் மற்றும் பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத்தினர் உடன் இருந்தனர். கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story