தூத்துக்குடியில், குடிசையில் பதுக்கிய 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வியாபாரி கைது
16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வியாபாரி கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் குடிசையில் பதுக்கி வைக்கப்பட்ட 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோடு ரவுண்டானா அருகே கல்லூரிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு குடிசையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
16 டன் ரேஷன் அரிசி
இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு உள்ள ஒரு குடிசையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 410 மூட்டையில் மொத்தம் 16 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
வியாபாரி கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை தூத்துக்குடி மாதாநகர் 6-வது தெருவை சேர்ந்த வியாபாரியான தனசேகரன் மகன் திருமணிராஜா (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் 16 டன் ரேஷன் அரிசி பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story