மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு


மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 10:25 PM IST (Updated: 26 Aug 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கூடலூர்

கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கூடலூர்-கேரள எல்லைகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

கேரளாவில் கொரோனா அதிகரிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் முதல் அலையை காட்டிலும், 2-வது அலையில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனாலும் தமிழக அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்ளிட்ட கேரள எல்லைகள் வழியாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு வருபவர்களுக்கு இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால் தமிழக-கேரள எல்லைகளில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலா பயணிகள் வருகிறார்களா? என்று வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  

திருப்பி அனுப்பப்பட்டனர்

இதில், உரிய ஆவணங்கள் இன்றி வரும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பனர். ஆவணங்கள் இல்லாமல் வந்த சிலர் வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story