நாமக்கல் அருகே லாரி மரத்தில் மோதி டிரைவர் சாவு-மற்றொரு விபத்தில் பட்டறை அதிபர் பலி
நாமக்கல் அருகே மினிலாரி மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் மெக்கானிக் பட்டறை அதிபர் பலியானார்.
நாமக்கல்,
திருச்சி மாவட்டம் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 40), கரூர் மாவட்டம் குழித்தலை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (20). இவர்கள் 2 பேரும் லாரி டிரைவர்கள். நேற்று முன்தினம் இரவு இவர்கள் பெங்களூருவில் இருந்து மினி லாரியில் பேரிக்காய் ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
குமரேசன் மினி லாரியை ஓட்டி வந்தார். சிவலிங்கம் மறுபுறத்தில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த மினி லாரி நாமக்கல் அருகே உள்ள பெரியவேப்பநத்தம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமரேசன் படுகாயம் அடைந்தார். அவருக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் மணி (41). இவர் நாமக்கல்லில் மெக்கானிக் பட்டறை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி அருகே சென்றபோது எதிரே மொபட்டில் மேதரமாதேவியை சேர்ந்த ரேவதி (45), இவருடைய மகள் கோபிகா (23) ஆகியோர் வந்தனர். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதி கொண்டன. இதில் மணி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கர்ப்பிணியான கோபிகா சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்தும் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story