பெண்ணாடம் அருகே மதுபோதையில் தகராறு; அண்ணன் அடித்துக் கொலை கல்லூரி மாணவர் கைது
பெண்ணாடம் அருகே மதுபோதையில் தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் மாரியம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கவர்னர். இவருக்கு கார்த்திகேயன்(வயது 30), கவியரசன்(21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் கார்த்திகேயன் வெல்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கவியரசன், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓவியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தலையில் தாக்கினார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கார்த்திகேயன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தனது தாய் கமலா, தந்தை கவர்னர் ஆகியோரிடம் ஆபாசமாக பேசி அவர்களை திட்டி உள்ளார்.
இதை பார்த்த கவியரசன், தனது அண்ணனிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவியரசன், அங்கு கிடந்த ஒரு உருட்டு கட்டையால் கார்த்திகேயனை தலையில் பலமாக தாக்கினார்.
தம்பி கைது
இதில் படுகாயமடைந்த அவர், அங்கேயே சுருண்டு விழுந்து மயங்கினார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கமலா கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கொலை வழக்காக பதிவு செய்து, கவியரசனை கைது செய்து விசாரித்து வருகின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story