முறையாக பொருட்கள் வழங்கக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
வேலூரில் முறையாக பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரேஷன் கடையின் அருகே வீட்டில் 750 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூரில் முறையாக பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரேஷன் கடையின் அருகே வீட்டில் 750 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்கள் முற்றுகை
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக கலையரசி என்பவர் பணிபுரிந்து வருகிறார். ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்டவை கடந்த சில மாதங்களாக சரியாக வழங்கப்படவில்லை என்றும், பயோமெட்ரிக் சரியாக வேலை செய்யாததால் பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரேஷன்கடையில் வாங்காத பொருட்களும் வாங்கியதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததாகவும், இதுகுறித்து விற்பனையாளரிடம் பொதுமக்கள் கேட்டதற்கு அவர் சரியாக பதில் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனைத்து பொருட்களும் முறையாக வழங்கக்கோரி நேற்று காலை ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரேஷன்அரிசி பதுக்கிய முதியவர் கைது
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை சரியான அளவில் வழங்கப்படுவதில்லை. எலக்ட்ரானிக் மின்னணு தராசு பழுதாகி பல மாதங்களாகி விட்டது. அதனை இதுவரை சரிசெய்யவில்லை. ரேஷன்கடைக்கு வரும் அரிசி மூட்டைகளை அருகே உள்ள வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையிலான குழுவினர் அந்த வீட்டிற்குள் அதிரடியாக சோதனையிட்டனர்.
அங்கு 8 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் அரியை (வயது 61) உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ரேஷன் கடையில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் கையிருப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கியது குறித்து கணக்கெடுக்கவும், அதில் முறைகேடு காணப்பட்டால் ரேஷன்கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேலூர் தாலுகா வழங்கல் அலுவலருக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story