காவிரி குடிநீர் வினிேயாகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


காவிரி குடிநீர் வினிேயாகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 5:41 PM GMT (Updated: 26 Aug 2021 5:41 PM GMT)

கீரனூரில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீரனூர்:
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை 
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதிமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் காவிரி குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வருவதாக கூறப்படுகிறது. அதுவும் குறைந்த அளவு தண்ணீரே கிடைப்பதாகவும், இதற்கான மாத கட்டணம் 100 ரூபாய் செலுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 
கீரனூர், புஷ்பநகர் பொது மக்களுக்கு கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அந்தபகுதி பொதுமக்கள் கீரனூர் பேரூராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன்  கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல் 
இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்ட பொதுமக்கள் புஷ்ப நகர் பகுதியில் உள்ள சாலையில் காலிக்குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றன. 
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இன்று (நேற்று) மாலைக்குள் காவிரி குடிநீர் அந்தப் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story