சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்


சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 11:18 PM IST (Updated: 26 Aug 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

மூஙகில்துறைப்பட்டு அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே பிரம்மகுண்டம் கிராமத்தில் உள்ள கிழக்கு தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. 
இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக சாலை எப்போதுமே சேறும், சகதியுமாகவே காட்சி அளிக்கிறது. மேலும் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. 
இது குறித்து புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நேற்று சேறும், சகதியுமான சாலையில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேதமடைந்த சாலையை சீரமைப்பதோடு, கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.  இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார்  விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் எங்கள் தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனே அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

டவடிக்கை

 மேலும் கழிவுநீர் கால்வாயும் அமைக்க வேண்டும் என கோரி ஊராட்சி செயலாளரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார்,. கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story