புதுக்கோட்டை எண்ணெய் குடோனில் தீ தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
புதுக்கோட்டை எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
புதுக்கோட்டை
எண்ணெய் குடோனில் தீ
புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்தவர் ராஜ்முகமது. இவர் தெற்கு ராஜவீதியில் எண்ணெய் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு எதிரே பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் அருகே குறுகலான சந்தின் உட்பகுதியில் எண்ணெய் சேமிப்பு குடோன் உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த எண்ணெய் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
இதனையடுத்து அருகே கடை நடத்துபவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜேஸ்வரன் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜகதீசன் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வீரர்கள் விரைந்து வந்து புதுக்கோட்டை தீயணைப்பு வாகனம் உள்பட 3 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எண்ணெய் பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
மேலும் குறுகலான பகுதியில் எண்ணெய் குடோன் இருந்ததாலும், எண்ணெய் பொருட்கள் இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருந்தது. இதனையடுத்து பழைய நகராட்சி கட்டிடத்தின் வழியே மேலே ஏறிய தீயணைப்பு வீரர்கள் எண்ணெய் குடோனின் மேற்கூரையை துளையிட்டு அதில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எண்ணெய் குடோனில் உள்ள எண்ணெய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்று புதுக்கோட்டை நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story