புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.8 கோடி கடன் இலக்கு
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிய தொழில் தொடங்கும் முதல் தலைமுறையை சேர்ந்த 110 பேருக்கு மானிய கடன் வழங்க ரூ.8 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிய தொழில் தொடங்கும் முதல் தலைமுறையை சேர்ந்த 110 பேருக்கு மானிய கடன் வழங்க ரூ.8 கோடியே 15.லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு, முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகின்றன. இதில் தமிழக அரசின் மானியமாக 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. இதை தற்போது உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி அதிகபட்ச மானியம் ரூ.50 லட்சமாக வழங்கப்படும். அத்துடன் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.
தகுதிகள்
இந்த திட்டத்தில் அரசு மூலம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலில் வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புபவர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம் மற்றும் மாசை ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து, ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
110 பேருக்கு..
எனவே, தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை - 630562 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.இது தொடர்பான மேலும் விவரங்களை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story