பத்தமடை பாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
இந்திய அஞ்சல் துறை சார்பில், பத்தமடை பாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
சேரன்மாதேவி:
பத்தமடையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரபரணி கரையில் விளையும் நாணல் கோரைகளை கொண்டு பாய் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பத்தமடை பாய், புவிசார் குறியீடு பெற்ற சிறப்புவாய்ந்தது. அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில், பத்தமடை பாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி பத்தமடை சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
நெல்லை கோட்ட மூத்த அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவாஜி கணேஷ் தலைமை தாங்கி, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். அதை பத்தமடை முஸ்லிம் சுன்னத்துவால் ஜமாத் தலைவர் டி.ஏ.மால்கம் அலி பெற்றுக் கொண்டார். அஞ்சல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த பாபநாசம் மேலணை அஞ்சல் அதிகாரி கிறிஸ்துராஜா பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.
பத்தமடை ராம சேஷய்யர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் என்.சுந்தர சுப்பிரமணியன், பத்தமடை பாய் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் முகம்மது யூசப் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அம்பை அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் பத்தமடை அஞ்சல் அதிகாரிகள், பணியாளர்கள், பாய் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பி.ஐடா எபினேசர் ராஜபாய் வரவேற்றார். முடிவில் உதவி கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மக்கள் தொடர்பு அதிகாரி கனகசபாபதி தொகுத்து வழங்கினார்.
Related Tags :
Next Story