களக்காடு சிவபுரம் நீரோடை தண்ணீரில் மாசு


களக்காடு சிவபுரம் நீரோடை தண்ணீரில் மாசு
x
தினத்தந்தி 27 Aug 2021 2:41 AM IST (Updated: 27 Aug 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு சிவபுரம் நீரோடை தண்ணீரில் மாசு இருப்பதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.

களக்காடு:
களக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் 79 பேர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு களக்காட்டில் நேரில் ஆய்வு செய்தார். குடிநீர் மூலமே மஞ்சள் காமாலை பரவியதாக கூறப்பட்டதை தொடர்ந்து குடிநீரை ஆய்வு செய்யவும், நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார். 

இதையடுத்து நெல்லை மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இணை இயக்குனர் கிருஷ்ணாலீலா, பேரூராட்சிகளின் துணை இயக்குனர் குற்றாலிங்கம் மேற்பார்வையில், வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்சினி, களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நம்பிராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ஆறுமுகநயினார் (களக்காடு பேரூராட்சி), முருகன் (திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்), சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு, குடிநீர் திட்ட பணியாளர் லட்சுமணன், மற்றும் ஊழியர்கள் நோய் தடுப்பு பணிகளிலும், சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

மேலும் களக்காடு சிதம்பரபுரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கருவேலங்குளம், மாவடி தாமிரபரணி நீரேற்று நிலையம், தனியார் டிராக்டர்கள் தண்ணீர் பிடித்து விற்பனை செய்த சிவபுரம் நீரோடை உள்ளிட்ட 15 இடங்களில் குடிநீரை பிடித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த ஆய்வுகளின் முடிவில் சிவபுரம் நீரோடையில் பிடிக்கப்பட்ட தண்ணீரில் மாசு கலந்திருந்ததும், அந்த தண்ணீர் பருக உகந்ததாக இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால் களக்காடு பேரூராட்சி குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல தடை விதித்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


Next Story