கட்டிட தொழிலாளி கொலையில் 6 பேர் கைது
பாளையங்கோட்டையில் கட்டிட தொழிலாளி கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருடைய அண்ணன் சேர்மன் (39). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இசக்கிமுத்து, சேர்மன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, இசக்கிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதனை தடுக்க முயன்ற சேர்மனுக்கும் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலையில் ஈடுபட்டது திம்மராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் (39), நம்பி நாராயணன் (20), மாணிக்கராஜ் (23), ஸ்ரீராம் குமார் (23), முத்து என்ற வாத்து முத்து (33), மேலபாட்டத்தை சேர்ந்த பழனி (30) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. உடனே போலீசார், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 6 பேரையும் நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, சுந்தர பாண்டியனின் மனைவியை இசக்கிமுத்து அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சுந்தர பாண்டியன் பலமுறை கண்டித்தும் இசக்கி முத்து தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் சுந்தர பாண்டியன், இசக்கி முத்து மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தர பாண்டியன் தனது நண்பர்கள் நம்பி நாராயணன் உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து இசக்கி முத்துவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி 6 பேரும் சேர்ந்து இசக்கி முத்துவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story