திருமண கோஷ்டியால் நிரம்பி வழிந்த கோவில்-மண்டபங்கள்
ஆவணி மாத முகூர்த்த தினத்தையொட்டி, நெல்லையில் திருமண கோஷ்டியால் கோவில், மண்டபங்கள் நிரம்பி வழிந்தன.
நெல்லை:
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமண நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்று வந்தன. இதுதவிர கடந்த ஆடி மாதத்தில் ஒருசில திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த நிலையில் ஆவணி மாதம் பிறந்து விட்டதால் முகூர்த்த நாளில் அதிகளவு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து, கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் திருமண நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்து வருகின்றன.
நேற்று திருமண முகூர்த்த நாள் ஆகும். இதனால் கோவில்களில் திருமணங்கள் அதிகளவில் நடந்தது. பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவிலில் காலை முதல் மதியம் வரை திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.
திருமண கோஷ்டியினர் அணி, அணியாக கோவிலுக்கு வந்தனர். சுவாமி சன்னதியில் வைத்து ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்து வெளியே அனுப்புவதற்குள் அடுத்த ஜோடி தயார் நிலையில் வந்து நின்றது.
இவ்வாறு அடுத்தடுத்து திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.
கோவிலுக்கு வெளியே பட்டாசு வெடிக்கப்பட்டதுடன், அந்தந்த திருமண கோஷ்டியினர் சார்பில் அழைத்து வரப்பட்ட செண்டை மேள குழுவினர் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருந்தனர். மேலும் தெற்கு பஜார் முழுவதும் திருமண வீட்டார்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர்.
இவ்வாறு கோவிலில் திருமணம் முடித்துக் கொண்டவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு மற்றும் உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர். அங்கும் உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இதுதவிர திருமண மண்டபங்களிலேயே பலர் திருமண நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதனால் நெல்லை மாநகரில் உள்ள மண்டபங்களில் நேற்று திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து மண்டபங்களிலும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
Related Tags :
Next Story