பத்ரா கால்வாயில் காருடன் பாய்ந்து ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி


பத்ரா கால்வாயில் காருடன் பாய்ந்து ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 27 Aug 2021 3:10 AM IST (Updated: 27 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

தரிகெரே அருகே பத்ரா கால்வாயில் காருடன் பாய்ந்து 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். அவர்களில் தாய்-மகன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

சிக்கமகளூரு: தரிகெரே அருகே பத்ரா கால்வாயில் காருடன் பாய்ந்து 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். அவர்களில் தாய்-மகன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

வாழ்க்கையில் விரக்தி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா பழைய ஜோடிகட்டே கிராமத்தை சேர்ந்தவர் நீது (வயது 32). இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த மஞ்சு (36) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களின் மகன் தியான் (13). மஞ்சுவின் தாய் சுனந்தம்மா. இவர்கள் 4 பேரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளனர். 

இதனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். இதுகுறித்து தங்கள் நண்பர்களுக்கு மஞ்சுவும், நீதுவும் தகவல் தெரிவித்து விட்டு மகன் தியான் மற்றும் சுனந்தாவுடன் காரில் பெங்களூருவில் இருந்து பழைய ஜோடிகட்டே நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

காருடன் கால்வாயில் பாய்ந்தனர்

அப்போது அவர்கள் நள்ளிரவு 2 மணி அளவில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி பகுதியில் வந்தனர். அந்த சமயத்தில் காருடன் கால்வாயில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி, எம்.சி.ஹள்ளி பகுதியில் பத்ரா கால்வாயில் காருடன் பாய்ந்தனர். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தரிகெரே போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் துரிதமாக செயல்பட்டு கால்வாயில் கிடந்த காரில் இருந்து நீது மற்றும் அவருடைய மகன் தியானை உயிருடன் மீட்டனர். அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக தரிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மஞ்சுவும், அவருடைய தாய் சுனந்தாவும் காரில் இல்லை.
 
2 பேரின் கதி என்ன?

பத்ரா கால்வாயில் அதிகமாக தண்ணீர் செல்வதால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் மஞ்சு மற்றும் அவருடைய தாய் சுனந்தாவின் கதி என்ன என்பது தெரியவில்லை.

 இதுகுறித்து தரிகெரே போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் அவர்கள் 4 பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அந்த முடிவுடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும்போது காருடன் பத்ரா கால்வாயில் பாய்ந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் 2 பேரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.

Next Story