தனியார் நிறுவன ஊழியர்களை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி உள்பட 6 பேர் கைது
பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர்களை கடத்தி உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர்களை கடத்தி உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 ஊழியர்கள் கடத்தல்
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் சீனிவாஸ் என்பவர் உணவு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றும் 2 பேர், நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் வேலை தொடர்பாக வெளியே புறப்பட்டு சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், வாகனத்துடன் 2 ஊழியர்களையும் கடத்தி சென்றிருந்தார்கள்.
பின்னர் உரிமையாளர் சீனிவாசை தொடர்பு கொண்டு, வாகனத்துடன் 2 ஊழியர்களையும் கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் நிலையத்தில் சீனிவாஸ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களை பிடிக்கவும், ஊழியர்களை மீட்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
6 பேர் கைது
இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடத்தல்காரர்கள் 6 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெயர் சந்தோஷ், ரமேஷ் என்ற குள்ளா ரமேஷ், ஹரீஷ், விவேக், துர்கேஷ், அரவிந்த் என்று தெரிந்தது. இவர்களில் ரமேஷ் ரவுடி ஆவார். சந்தோஷ் ‘யூ-டியூப்’ சேனலில் வேலை செய்வதும் தெரிந்தது. சீனிவாசிடம் ஏராளமான பணம் இருப்பது பற்றி 6 பேருக்கும் தெரியவந்துள்ளது. அவரை மிரட்டி பணம் பறிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரிடம் பணியாற்றும் ஊழியர்களை கடத்தி சென்று ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடம் இருந்து ஒரு வாகனம், செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 6 பேர் மீதும் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story