காவிரி-குண்டாறு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; பசவராஜ்பொம்மை அறிவிப்பு


காவிரி-குண்டாறு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; பசவராஜ்பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 3:11 AM IST (Updated: 27 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்படும் என்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகு பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

பெங்களூரு: தமிழக அரசின் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்படும் என்று சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகு பசவராஜ்பொம்மை அறிவித்தார். 

மேகதாது அணை

கர்நாடகத்தில் ராமநகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மாநில அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக விவரமான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) மாநில அரசால் தயாரிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மத்திய ஜல்சக்தித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

இதுவரை மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எக்காரணம் கொண்டும் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று வற்புறுத்தி வருகிறது.

சட்ட ரீதியாக முடிவு

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அவர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேகதாது திட்டம் குடிநீர், மின் உற்பத்தி ஆகிய நோக்கங்களுக்கு செயல்படுத்தப்படுவதால், உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

மேலும் இதற்கு சட்ட ரீதியாக எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து சட்ட ரீதியாக பரிசீலித்து முடிவு எடுப்பதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.

சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

இந்த நிலையில் பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று மேகதாது திட்டம் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர். மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அந்த மனு விசாரணைக்கு வரும்போது, மாநில அரசு அங்கு எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள்

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்த வழக்குகள் பற்றி விவாதித்தோம். பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது, கர்நாடகத்தின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்.

கலசா-பண்டூரி திட்டம் குறித்தும் விவாதித்தோம். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 2-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்துகிறது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்னொரு வழக்கு தொடரப்படும். இதற்கு மத்திய அரசிடம் நாங்கள் ஆட்சேனை தெரிவிப்போம். சட்ட நிபுணர்கள், தங்களின் கருத்துகளை ஒரு வாரத்தில் அரசுக்கு தெரிவிப்பார்கள். நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு

இந்த கூட்டத்தில் சிவக்குமார் உதாசி எம்.பி., நீர்ப்பானத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங், முதல்-மந்திரியின் செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது தமிழக அரசு காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின்படி தென்மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதே நோக்கமாகும்.  இதற்கு எதிராக தான் கர்நாடக அரசு ஏற்கனவே ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்வதாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Next Story