பாம்பன் புதிய ரெயில் பாலம் தூண்கள் பணியை விரைவில் முடிக்க திட்டம்


பாம்பன் புதிய ரெயில் பாலம் தூண்கள் பணியை விரைவில் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 8:12 PM IST (Updated: 27 Aug 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

மழை சீசன் தொடங்கும் முன்பாக பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் தூண்கள் அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ராமேசுவரம், 
மழை சீசன் தொடங்கும் முன்பாக பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் தூண்கள் அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பழமையான பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ளது ரெயில் பாலம். ராமேசுவரம் தீவை இணைப்பதில் இந்த ரெயில் பாலம் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 100 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 1½ வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் 1½ மாத காலம் உள்ளது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கும் பட்சத்தில் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதோடு கடல் சீற்றமும் அதிகமாக இருக்கும். 
தூண்கள் 
அதனால் மழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் தூண்கள் அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க ஆர்.வி.என்.எல் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அதற்காக இரவு-பகலாக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
பாம்பன் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலும் புதிய ரெயில் பாலத்திற்கு தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. 
இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் கடலுக்குள் ரூ. 400 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 
முதல் கர்டர்
மழை சீசன் தொடங்கும் முன்பே  புதிய ரெயில் பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற செப்டம்பர் மாத இறுதியில் புதிய ரெயில் பாலத்தின் பகுதிகளில் தூக்குப் பாலத்திற்கான முதல் கர்டர் வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து மற்ற கர்டர்கள் பொருத்தப்படும். புதிய ரெயில் பாலத்தில் 330 தூண்கள் மீது 99 கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. ஒவ்வொரு கர்டரும் 20 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் 55 டன் எடையும் கொண்டதாகும். 
அதேபோல் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தின் மொத்த எடை 500 கிலோ, 77 மீட்டர் நீளம், அகலம் 12 மீட்டர். கப்பல்கள் வரும்போது தானாகவே திறந்து மூடும் வகையில் தூக்கு பாலம் கட்டப்பட உள்ளது. புதிய ரெயில் பாலத்தின் மொத்த நீளம் 2.1கிலோ மீட்டர்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story