வீரபாண்டி அருகே ஆம்னி பஸ்-மினி லாரி மோதல்; 2 டிரைவர்கள் பலி
வீரபாண்டி அருகே ஆம்னி பஸ்சும், மினி லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் வாகனங்களின் 2 டிரைவர்களும் பலியாகினர்.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே ஆம்னி பஸ்சும், மினி லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் வாகனங்களின் 2 டிரைவர்களும் பலியாகினர்.
நேருக்குநேர் மோதல்
சென்னையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று காலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 15 பயணிகள் இருந்தனர். பஸ்சை கம்பம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் மனோஜ்கண்ணன் (வயது 28) ஓட்டி வந்தார். அதில், உதவியாளராக உமாசங்கர் (52) என்பவரும் வந்தார். இதேபோல் எதிரே கம்பத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த விக்னேஷ் (42) ஓட்டி வந்தார்.
வீரபாண்டி அருகே உப்பார்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது ஆம்னி பஸ்சும், மினி லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சியில் அபயகுரல் எழுப்பினர். மேலும் விபத்தில் ஆம்னி பஸ்சின் முன்பகுதியும், மினி லாரியின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கியது.
2 டிரைவர்கள் பலி
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த மனோஜ் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த உதவியாளர் உமா சங்கர் படுகாயம் அடைந்தார். பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி தப்பினர். இதேபோல் மினி லாரி டிரைவரான விக்னேசும் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு படுகாயத்துடன் உயிருக்கு போராடிய விக்னேஷ் மற்றும் உமாசங்கரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனோஜ்கண்ணன் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். உமாசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக தேனி-பெரியகுளம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் எந்திரம் மூலம் பஸ்சும், மினி லாரியும் சாலையோரம் அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
ஆம்னி பஸ், மினி லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story