முதல்போக சம்பா சாகுபடிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு-விவசாயிகள் வலியுறுத்தல்


முதல்போக சம்பா சாகுபடிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு-விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Aug 2021 10:29 PM IST (Updated: 27 Aug 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

முதல்போக சம்பா சாகுபடிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்யத்தொடங்கியுள்ளதால் அனைத்து ஏரிகளிலும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் மதகு, கலிங்கலை சீர்செய்து தர வேண்டும். அதுபோல் ஏரிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களையும் முழுவதுமாக அகற்ற வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் முதல்போக சம்பா சாகுபடிக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசனம் பெறும். அதுமட்டுமின்றி 6 அணைக்கட்டுகளுக்கும் தண்ணீர் வந்து சேரும். எனவே சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேரடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வழிவகை செய்ய வேண்டும். மலட்டாறு சீரமைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 

பட்டா மாற்றம்

பட்டா மாற்றம் செய்து தரக்கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் பட்டா மாற்றம் செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது, அதை களைய வேண்டும். பதிவு செய்த உடனேயே குறைந்த வாடகையில் டிராக்டர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நந்தன் கால்வாய் திட்டப்பணிகளை சிறப்பான முறையிலும், விரைந்தும் முடிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். 
இதற்கு பதிலளித்து கலெக்டர் டி.மோகன் பேசியதாவது:-

பயிர் காப்பீடு

கடந்த கூட்டத்தின்போது தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.25 கோடியாக இருந்தது. அவற்றில் ரூ.13½ கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.11.63 கோடி நிலுவையில் உள்ளது. அந்த தொகையை செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் வழங்கி முடிப்பதாக ஆலை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கும். மானாவரி மணிலா, கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகிற 31-ந் தேதியும், மரவள்ளி, வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பர் 15-ந் தேதியும் கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

உரம் இருப்பு

மேலும் மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான அளவு உரம் இருப்பில் உள்ளது. மாவட்டத்தில் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் நெல் வரத்து இல்லாத 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்து பயன்பெறலாம். ஏரிகளில் மதகு, கலிங்கலை சீரமைக்க பொதுப்பணித்துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர விவசாயிகளின் மற்ற அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story