வேலூர் கோட்டை அகழியில் 60 போலீசாருக்கு பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி


வேலூர் கோட்டை அகழியில் 60 போலீசாருக்கு பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 27 Aug 2021 10:30 PM IST (Updated: 27 Aug 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை அகழியில் 60 போலீசாருக்கு பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் கோட்டை அகழியில் 60 போலீசாருக்கு பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

பேரிடர் மீட்பு பயிற்சி

தமிழகத்தில் பருவமழை நெருங்குவதையொட்டி மழை வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து போலீசாருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சென்னையில் இயங்கி வரும் கமாண்டோ பயிற்சி மையம் மூலம் தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 60 போலீசாருக்கு பயிற்சி அளிக்க சென்னை கமாண்டோ பயிற்சி மைய சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்டு தலைமையிலான குழுவினர் வேலூர் வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டை அகழியில் நேற்று காலை பேரிடர் மீட்பு காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.

முதலுதவி

மேலும், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்பது மற்றும் விபத்துகளில் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும், புயல், மழை காலங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்தால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, மரங்களை வெட்டும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து தெரிவிக்கப்பட்டது. 

இந்த பயிற்சி 3 நாட்கள் நடக்கிறது. கோட்டை அகழியில் ஒருவர் மூழ்குவது போலவும், அவரை மீட்புக் குழுவினர் படகில் சென்று மீட்பது போலவும் செய்து காட்டினர்.

Next Story