குறிஞ்சிப்பாடியில் வீட்டில் பதுக்கிய 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது


குறிஞ்சிப்பாடியில் வீட்டில் பதுக்கிய 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2021 5:11 PM GMT (Updated: 2021-08-27T22:41:56+05:30)

குறிஞ்சிப்பாடியில் வீட்டில் பதுக்கிய 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி, 

 குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில்  சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் மீனாட்சி பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது  அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குறிஞ்சிப்பாடி வேலமுதலி தெருவை சேர்ந்தவர் முத்தையன் மகன் சக்திவேல் (வயது 49) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். 

மேலும் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில், தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ்  உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. 

400 கிலோ பறிமுதல்

மேற்கொண்டு விசாரித்ததில், குறிஞ்சிப்பாடி அருகே புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் கணேசன் மகன் ராஜா என்பவர் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். 

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து மூட்டை, மூட்டைகளாக இருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2½  லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    
3 பேர் கைது

மேலும் இவருடன்  சேர்ந்து புகையிலை பொருட்களை மீனாட்சி பேட்டை பாலசுப்பிரமணியன் மகன் சிவமணி (49), கோ.சத்திரம் ராமசாமி மகன் கதிர்வேல் (51), வடலூர் கோட்டக்கரை சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

 இதையடுத்து சக்திவேல், சிவமணி, கதிர்வேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சுரேஷ், ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story