மகனின் திருமண வரவேற்புக்கு சென்றபோது விபத்து டேங்கர் லாரி மீது கார் மோதல்; தம்பதி பலி கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்


மகனின் திருமண வரவேற்புக்கு சென்றபோது விபத்து டேங்கர் லாரி மீது கார் மோதல்; தம்பதி பலி கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Aug 2021 10:53 PM IST (Updated: 27 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். மேலும் கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

ராமநத்தம், 

சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தவர் ஜவகர்(வயது 60). இவரது மனைவி ஜாஸ்மின்(55). இவர்களது மகன் ஜெப்ரியல் ராஜா. இவருக்கும், தேனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சென்னையில் கடந்த 20-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு விழா மணப்பெண்ணின் சொந்த ஊரான தேனியில் இன்று(சனிக்கிழமை) நடைபெற இருந்தது.

இதில் பங்கேற்க ஜவகர், ஜாஸ்மின், இவர்களது மருமகனான திருமங்கலம் அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஜவன்வினித் (27), மகள் ஜெனி(24), 4 மாத பேரக்குழந்தை ஆகியோருடன் சென்னையில் இருந்து ஒரு காரில் தேனியை நோக்கி நேற்று காலை புறப்பட்டனர்.

டேங்கர் லாரி மீது மோதியது

காரை ஜவகர் ஓட்டி வந்தார். முன் இருக்கையில் ஜாஸ்மினும், பின் இருக்கையில் அவர்களது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் இருந்தனர்.  

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த லெக்கூர் அருகே மாலை 3.30 மணியளவில் வந்தபோது ஜவகரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. 

 அப்போது காரில் இருந்த ‘ஏர்’ பலூன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மேலும் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

தம்பதி பலி 

இதில் ஜவகர், ஜாஸ்மின் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஜெனி, ஜவன்வினித் மற்றும் அவர்களது 4 மாத ஆண் குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். 

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

போலீசாருடன் வாக்குவாதம்

விபத்தில் பலியான ஜவகர், ஜாஸ்மின் ஆகியோரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அமரர் ஊர்தி  வரவழைக்கப்பட்டது. 

அதில்  2 பேரின் உடலை ஏற்ற அதன் டிரைவரை போலீசார் உதவிக்கு அழைத்தனர்.  ஆனால், அவர் எனது வேலை வாகனம் ஓட்டுவது மட்டும் தான், இறந்தவர்களின் உடலை ஏற்றுவது எனது வேலை இல்லை என்றார். இதனால் போலீசாருக்கும், அந்த டிரைவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

சுமார் 30 நிமிடம் அவர்களது வாக்குவாதம் நீடித்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உதவியுடன், 2 பேரின் உடலையும் அமரர் ஊர்தியில் ஏற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story