ரூ.2 கோடி மதிப்புள்ள வலம்புரி சங்கு விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 7 பேர் கைது


ரூ.2 கோடி மதிப்புள்ள வலம்புரி சங்கு விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2021 11:46 PM IST (Updated: 27 Aug 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரூ.2 கோடி மதிப்புள்ள வலம்புரி சங்கை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலையில் ரூ.2 கோடி மதிப்புள்ள வலம்புரி சங்கை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அபூர்வ வலம்புரி சங்கு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் பரணி (வயது 46). இவரிடம் திருவண்ணாமலை வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (53) என்பவர் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தங்களிடம் அபூர்வ வலம்புரி சங்கு இருப்பதாகவும், அந்த சங்கை வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரராகி விடுவார்கள் என்றும் அதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சங்கை விற்பனை செய்ய இருப்பதாகவும், விற்பனை கமிஷனாக பல லட்சம் தருகிறோம், ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் என்றும் கூறி உள்ளார்.

இதையடுத்து பரணியை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பாபா கோவில் அருகில் வருமாறு அழைத்து உள்ளார். அதன்படி அவர் அங்கு சென்று பார்த்த போது கோவிந்தராஜுடன் ஒரு கும்பல் இருந்து உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பரணி அது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

7 பேர் பிடிபட்டனர்

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 7 பேர் சிக்கினர். ஆனால் சங்கு கொண்டு வந்த நபர் தப்பியோடி விட்டார். 

பின்னர் பிடிபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (53), ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த சதீஷ் (21), வேட்டவலத்தை சேர்ந்த உமாசங்கர் (38), செஞ்சி தாலுகா ஜெயங்குண்டம் பகுதியை சேர்ந்த அரசு (50), புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தை சேர்ந்த ராம்குமார் (32), திருவண்ணாமலை பே கோபுரத் தெருவை சேர்ந்த அஸ்வத்தாமன் (28), தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த நாகராஜ் (41) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

மேலும் தப்பியோடிய நபர் கடலூரை சேர்ந்த ஸ்ரீராம் என்பது தெரியவந்தது. அவர் மூலம் அவர்கள் ஒன்றிணைந்து மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர்.

மோசடியில் ஈடுபட முயற்சி
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி நேரில் வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் வலம்புரி சங்கு எனக் கூறி போலி சங்கை ஏமாந்தவர்களிடம் மூளை சலவை செய்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த சங்கு ஒன்று பறிமுதல் 
செய்யப்பட்டது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 7 பேரையும் கைது செய்தனர். மேலும் வெவ்வேறு பகுதியை சேர்ந்த இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தனர். இவர்கள் வேறு ஏதேனும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story