திருச்சி மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள்


திருச்சி மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள்
x
தினத்தந்தி 27 Aug 2021 6:52 PM GMT (Updated: 2021-08-28T00:22:13+05:30)

திருச்சி மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன

திருச்சி, ஆக.28-
திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் திருச்சி 28, புதுக்கோட்டை 39, கரூர் 15, பெரம்பலூர் 12, அரியலூர் 25, தஞ்சை 48, திருவாரூர் 27, நாகப்பட்டினம் 17, மயிலாடுதுறை 11 என 222 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், குழந்தை கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர்கள், பெண்கள் உதவிக்குழு காவலர்கள் ஆகியோர் கிராமக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து நேரடியாக சம்பந்தப்பட்ட குற்ற இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தி வருகிறார்கள்.
இதுவரை திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மதுப்பழக்கத்துக்கு ஆளான தந்தையால் துன்புறுத்தப்படும் குழந்தைகள், கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுடைய பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்வதற்கான தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மத்திய மண்டலத்தில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகள் கண்டறியப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலத்துறை மூலம் அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story